Saturday 12 January 2013

சொந்த ஊர்

சொந்த ஊர்

சொந்தம் என்று கொண்டாடிக்கொள்ள ஓர் ஊர் இருந்தால் உயிரின்  வேர் அங்கே இறங்கி ஆழ்ந்து பற்றி இருப்புக்கு நியாயம் அல்லது வேட்கை கற்பிக்கிறது
 எத்தனையோ மயக்கங்களில் ஒன்று சொந்த ஊர் மயக்கம் . அது தனி
அதிலே ஒரு  தனிக் கிறக்கம்.
அனுபவித்தால் ஒழிய அறியவோ உணரவோ இயலாதது.
 எது சொந்த ஊர்?
சொத்தும் உறவும் உள்ள ஊர் சொந்த ஊர் .
இரண்டும் அற்றவர்க்கு?
பிறந்த ஊர் சொந்த ஊர்.
நான் பிறந்து மண்ணில் வந்து விழுந்த ஊர் வெள்ளக்குட்டை.
சொத்து என்று சொல்லிக்கொள்ள ஒரு சில புளியமரங்களும் எழுபது சென்ட் நிலமும் கூரை ஓட்டையான ஒரு நாலு கட்டு வீட்டின் (?) ஓர் அறையும் இருந்தால் அது சொந்த ஊராகிவிடுமா?
மூன்று வயதில் ஊரை விட்டுப்பிரிந்து பெற்றோர் ஓடுகிற இடமெல்லாம் உடன் ஓடி சென்னைக்கு வந்து ஒரு வட்டம் சுற்றி திணறித் திண்டாடி போக்கிடம் தேடி மீண்டும் திரும்பியபோது வரவேற்றது திருப்பத்தூர்.
அது என் அன்னையின் சொந்த ஊர்.
அவர் அங்கே பிறந்தார். அங்கே வளர்ந்தார்.
விருப்பமற்ற திருமணத்தால் விரக்தியுற்று வெள்ளக்குட்டையின் மருமகளாக மாமன் மகனை மணக்கவேண்டியவராக வந்தார்.அதனால் நான் அங்கே பிறந்தேன்.
விருப்பும் வெறுப்பும் தொழில் லாபமும் நஷ்டமும் என்று வாழ்ந்த வாழ்வில் ஒரு வீழ்ச்சி கண்டபோது என் தாயையும் தந்தையையும்  மீண்டும் திருப்பத்தூர் வரவேற்றது.
சென்னையிலே சென்னபுரி அன்னதான சமாஜம் என்ற அனாதை மாணவர்களுக்கான ஹாஸ்டலில் 11 வயதில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுதியபின் குடும்பம் குடிபெயர்ந்திருந்த திருப்பத்தூருக்கு 16 வயதில்  போனேன்.
அங்கே  மீண்டும் ஒரு முறை பிறந்தேன்.
 எழுத்தாளனாக .. கம்யூனிஸ்டாக. இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய வாதியாக .உலகம் இதுவென அறிய விதிக்கப்பட்ட மனிதாபிமானியாக. எப்போதுமே  புத்தகமும் கையுமாக அலையும்  வாசகனாக நான் அங்கே பிறந்தேன். அப்படியே வளர்ந்தேன் 
 16 வயதில் அங்கே பிரவேசித்தவன் 26வயதில் தான் திருப்பத்தூரை விட்டு வெளியேறினேன் .பெரிய காரணங்கள் ஏதுமில்லை.வீட்டு வாடகை கட்டமுடியவில்லை தந்தையோ காலுடைந்து காசநோய் வந்து நடத்திக்கொண்டிருந்த பெட்டிக்கடையையும் மூடி விட்டார். இரண்டு தம்பிகள். தாய் தந்தை அப்போது தான் திருமணமாகி வந்த மனைவி என்று என் ஒற்றை வருமானத்தில் ஓடிய வண்டி.
வாடகை? ரொம்பப்பெரிதோ? 9 ரூபாய் .
வீடு பெரியது .பம்பாயில் வசித்த ஒரு முஸ்லீம் தான் உரிமையாளர்.அதில் 3அறைகள். தெருவோர அறையை உள் வாடகை 7 ரூபாய்க்கு விட்டும் மீதி இரண்டு ரூபாயைக் கூடச சேர்த்துக்கட்ட முடியாத குடும்ப நிலைமை. திருப்பத்தூர் நண்பர்கள் சென்னைக்குப் போகச்சொன்னார்கள் 
சென்னை நண்பர்கள் வந்துவிடாதே என்று பயமுறுத்தினார்கள் 
ஏனோ சென்னைக்கு வந்து சிவமானவர் எல்லாரும் பிறர் யாரும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்று தடுத்தாட்கொள்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.
வெள்ளக்குட்டையில் பிறந்து வளர்ந்த என் தாய்வழிப் பாட்டி நான் படும் பாட்டைபார்த்து ' போ சொந்த ஊருக்கு' என்றார்.
என் மீது உள்ளன்பும் மாறாத பரிவும் கொண்ட அந்தத் தாயுள்ளம் எனக்குத் தெய்வம் போல் வழிகாட்டியதாகத்தான் எனக்குப் பட்டது.
திருப்பத்தூரின் மறக்கமுடியாத நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு போனேன் நான் பிறந்த ஊருக்கு.
மனசின் மறக்கமுடியாத பாறாங்கல் கோபாலபுரம் என்ற புதுமைப் பித்தனின் வாக்கை  மாற்றிப்போட்டு மனசின் மறக்கமுடியாத ஜீவ ஊற்று திருப்பத்தூர் என்று தான் புறப்பட்டேன்.